டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை : பெருமிதத்தில் தமிழக அரசு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் போட்டியின் 7வது நாளான நேற்று இரண்டு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து போட்டியின் 8வது நாளான இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் உயரம் தாண்டுதலில் பீகாரை சேர்ந்த சரத்குமார் வெண்கலபதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து இருப்பதை தமிழக அரசு வெகுவாக பாராட்டி உள்ளது.

இதுகுறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ள வீரர் மாரியப்பனுக்கு தமிழக முதல்வரின் சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 216.8 புள்ளிகள் குவித்து 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.