டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆக.24ம் தேதி துவங்கியது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.
இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் இறுதிநாளான இன்று கலைநிகழ்ச்சிகளுடன் போட்டிகள் நிறைவுபெற்றன. நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
இதனையடுத்து நடப்பு பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் டோக்கியோ பாரலிம்பிக் தரவரிசையில் 24வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்வகையில் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும். இந்த விளையாட்டுகள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும். இந்த சாதனை அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை விளையாட்டுக்கு ஊக்குவிக்கும். எங்கள் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு சாம்பியன் மற்றும் உத்வேகத்தின் ஆதாரம். இந்தியா வென்ற வரலாற்றுப் பதக்கங்களின் எண்ணிக்கை எங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குடும்பங்கள் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பாராட்ட விரும்புகிறேன். விளையாட்டுகளில் அதிக பங்கேற்பை உறுதி செய்வதற்காக வெற்றிகளை உருவாக்க நாங்கள் நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக 1968 முதல் 2016 வரையுள்ள டோக்கியோ பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது சாதனையாக இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கங்களுடன் 19 பதக்கங்களை வென்றுள்ளது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.