
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றிய இந்திய ஆடவர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்ட நிலையில், 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து இந்திய அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளதால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம். 41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஹாக்கியில் 12வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவரது டுவிட்டர் பக்கத்தில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது ஒரு பெரிய தருணம். உங்கள் சாதனைகுறித்து நாடு முழுவதும் பெருமைப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வரலாற்று! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர். எங்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெற்ற வெற்றி ஹாக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.
முன்னதாக 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்றது. அதனைத்தொடர்ந்து, இந்திய ஆடவர் ஹாக்கி அணி தற்போது வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12வது பதக்கத்தை இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.