
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் பதக்கத்தை தவர விட்டதால் இந்திய மகளிர் அணியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மகளிர் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்காக இந்திய அணியும், பிரிட்டனும் மோதின.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி இறுதிவரை கடுமையாக போராடிய சூழலில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதனைத்தொடர்ந்து தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.
மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வியடைந்ததால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய மகளிர் ஹாக்கி அணி களத்தில் சிறந்து விளங்கியது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர். உங்களை நினைத்து நாங்கள் பெறுமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும். இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம் என கூறியுள்ளார்.