டோக்கியோவில் நாளை துவங்கும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் 160 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
மேலும் இப்போட்டியில் இந்தியா சார்பில் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முன்னதாக கடந்த ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாராலிம்பிக்கிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் நடவடிக்கையின்படி, பாராலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பாராலிம்பிக் போட்டியை பார்க்க மைதானங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார்.