டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள் அல்லது கவர்னர்கள், மத்திய மந்திரி பதவியில் உள்ள உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். டெல்லி, தெலுங்கானா, மே.வங்க முதல் மந்திரி இந்த நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.