டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் இன்று திறந்து விடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி, தண்ணீர் வரத்தை கண்காணிக்க குழு அமைக்க மஜக கோரிக்கை

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து விடுகிறார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துவருகிறது. இதனால் அணை நீர் மட்டம் 116.67 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அணையில் இருந்து நீர் திறந்துவிடுகிறார். சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1925 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுமானப் பணி தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கான தண்ணீர், மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி திறப்பது வழக்கம்.

மழை, அணையில் நீர் இருப்பை பொருத்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு தேதியில் மாறுபாடு இருக்கும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணைகட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் இது வரை 18 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டியது, இம்மாதம் முன் கூட்டியே (மே 24ம் தேதி) மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நீர் திறந்துவிட உள்ளார்.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு இதுவரை 88 ஆண்டுகளில் 1936, 1937, 1938,1940, 19411942. 1943, 1944, 1945, 1946, 1947 ஆகிய ஆண்டுகளில் ஜுன் 12ம்தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 2011ம் ஆண்டில் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டுள்ளது. இதில் மே மாதத்தைப் பொறுத்த வரை கடந்த 1947ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டுதான், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்கு ஜனவரி 28ம் தேதி வரை 129 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, இடை இடையே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவையைப் பொருத்து அணையில் இருந்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் திறப்பு குறைவாக உள்ளதால், தொடர்ந்து அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 88.58 டிஎம்சி-யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 4,91,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடைமடை துணை கால்வாய்களுக்கு தண்ணீர் வரத்தை கண்காணிக்க குழு அமைக்க மஜக கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாக திகழ்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நாகுடி மற்றும் மேற்பனைக்காடு உள்ளிட்ட சுமார் 200 கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை நிரப்பி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை விளைவிக்கும் காவிரி தண்ணீர் வந்து சேரும் கடைமடை பகுதியாக உள்ளது. இப்பகுதியை தாண்டி செல்லும் காவிரிநீர் கடலில் உபரியாக சென்றுசேரும். சுமார் 90 ஆண்டுகளாக இப்பகுதி காவிரியின்  கடைமடை பகுதியாக பயனடைந்துவருகிறது.

முறைவைத்து வரும் காவிரி தண்ணீர் நெற்பயிரை விளைவிக்கும் அளவுக்கு அனைத்து கடைமடை கிராமங்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து விவசாயிகளுக்கு உதவிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 77 = 84