டெங்கு காய்ச்சல் : உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் ஒரே வாரத்தில் 40 உயிரிழப்பு – பொதுமக்கள் அச்சம்

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் டெங்கு காய்ச்சலால் ஒரே வாரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 32 குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால், அதை டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து, டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பிரோசாபாத் மாவட்டத்தில் செப்டம்பர் 6ம் தேதி வரை, 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது என அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆக்ரா, மெயின்புரி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், தற்போது டெங்கு காய்ச்சலால் கடந்த ஒரு வாரத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.