
சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பயங்கர வெடிகுண்டு, ஆயுதங்களுடன் டிபன்பாக்ஸ் ஒன்று டிரோன் மூலம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் ஜம்மு காஷ்மீர் விமானப் படைத்தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் டிரோன் மூலம் மிரட்டல் நடத்தினர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எல்லையை ஒட்டிய கிராமம் ஒன்றில் டிரோன் மூலமாக டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
அமிர்தசரஸின் டிஜிபி தின்கர் குப்தா கூறுகையில், ‘‘அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள தாலிகே கிராமத்தில் நேற்று ஒரு மர்ம டிபன்பாக்ஸ் கிடந்தது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி போலீசார் அந்த இடத்துக்கு சென்று டிபன்பாக்சில் 5 கையெறி குண்டுகள், 100 ரவுண்ட் சுடும் அளவுக்கான தோட்டாக்கள், 2 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டது. இவை பாகிஸ்தானிலிருந்து கொண்டு வந்து டிரோன் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். விஷயம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தேசிய பாதுகாப்பு படையின் உதவியை நாடியுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.