டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்.. லாட்டரியில் விழுந்த ரூ. 83 லட்சம்

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது எப்போது, யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இவருக்குதான் அதிர்ஷ்டம் கிடைக்கும் பாக்கியம் உள்ளது என யாரையும் நாம் குறிப்பிட்டு கூற முடியாது. இதுபோன்ற அதிர்ஷ்டத்தால் ஒருசிலர் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுவதையும் நம் தினசரி வாழ்க்கையிலும் பத்திரிக்கை செய்திகளிலும் பார்த்து வருகிறோம். அப்படியொரு அதிர்ஷ்டம் தான் அமெரிக்காவில் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் கெண்டுக்கி நகரில் உள்ள ஜெஃபர்ஸன் கவுண்டி பொதுப் பள்ளியில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் ஜேம்ஸ் கீயோன். தற்போது இவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. பரிசு கிடைத்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ள ஜேம்ஸ், இந்த பணத்தை வைத்துக் கொண்டு தனது ஓய்வு காலத்தை சந்தோஷமாகவும் குதூகலமாகவும் கழிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு வரும் என்பார்களே. ஜேம்ஸ் விஷயத்தில் அது சரிதான். சமீபத்தில் இவர் பவர்பால் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார். இவர் வாங்கியிருந்த டிக்கெட்டுகளில் நான்கு வெள்ளை நிற பால்கள் சரியாக பொறுந்தவே, பரிசுத் தொகையாக இவருக்கு சுமார் ரூ.82,93,735 கிடைத்துள்ளது. பரிசு மழை இன்னும் முடியவில்லை. இவர் எப்போதுமே ஒருமுறைக்கு இரண்டு முறை லாட்டரியை விளையாடக் கூடியவர். ஆகவே தற்போது இவருக்கு பரிசு தொகை இரண்டு மடங்காக கிடைத்துள்ளது.

“என்னால் இதை நம்பவே முடியவில்லை. ஒருமுறைக்கு நான்கு முறை அந்த எண்களை சரி பார்த்தேன். அந்த எண்கள் மாறாமல் அப்படியே இருந்தன. ஆஹா, நமக்கு ஜக்பாட் அடித்துவிட்டது என்பதை அதன்பிறகே உணர்ந்தேன். முதலில் 50,000 அமெரிக்க டாலர் பரிசு விழுந்தது. நாம்தான் எப்போதுமே பலமுறை விளையாடுவோமே என யோசித்துக் கொண்டிருந்த போதுதான், எனக்கு கிடைத்த பரிசுத் தொகை பவர்பிளே காரணமாக இரண்டு மடங்கானது” என சந்தோஷமாக கூறுகிறார் ஜேம்ஸ். பரிசு கிடைத்த அடுத்த நிமிடமே, இனி நான் வேலைக்கு வர மாட்டேன் என தன்னுடைய முதலாளியிடம் கூறிவிட்டார் ஜேம்ஸ்.

பரிசு கிடைத்த விவரம் அறிந்ததும் ஜேம்ஸின் மனைவி மோண்டோவும் பூரிப்படைந்து போயுள்ளார். தற்போது வரிப்பிடித்தம் போக ஜேம்ஸின் கைக்கு ரூ.59 லட்சம் கிடைக்கும். இந்த பணத்தை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என இப்போதே திட்டம் போட்டு வைத்துள்ளார் ஜேம்ஸ். இவருக்கு பூனை மிகவும் பிடிக்கும் என்பதால், உள்ளூரில் இயங்கி வரும் பூனை மீட்பு மையத்திற்கு சில தொகைகளை செலவு செய்யவுள்ளார். அதுமட்டுமின்றி தங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கி, மீதமுள்ள தங்கள் காலத்தை அமைதியாக அந்த வீட்டில் கழிக்க போவதாக கணவனும் மனைவியும் முடிவு செய்துள்ளனர்.