டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு – புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்ப்பு

டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், விண்ணப்பிப்பது தொடங்கி, தேர்வு தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராவதற்கு இது பெரிதும் உதவுகிறது.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே வெளியிட்டது. அதில், 35 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) டிஎன்பிஎஸ்சி கடந்த 17-ம் தேதி இரவு வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில், உதவி ஜெயிலர் (59 காலியிடம்), அரசு போக்குவரத்து கழக மேலாளர் – சட்டம் (14), எஸ்எஸ்எல்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ கல்வித் தகுதி தேவைப்படும் தொழில்நுட்ப பணிகள் (130), பட்டப் படிப்புடன் தொழில்நுட்பக் கல்வித் தகுதி உடைய பணிகள் (400), தடயவியல் துறை இளநிலை அறிவியல் அலுவலர் (29), தடயவியல் துறை ஆய்வக உதவியாளர் (25), உதவி வேளாண் அலுவலர் (81), உதவி தோட்டக்கலை அலுவலர் (120) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இத்தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

புதிய அட்டவணையின்படி, உதவி ஜெயிலர் தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகிறது. இதன்மூலம் 54 உதவி ஆண் ஜெயிலர்கள், 5 உதவி பெண் ஜெயிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட்டு, ஆகஸ்டில் முடிவுகள் வெளியிடப்படும். செப்டம்பரில் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =