புதுக்கோட்டை மாவட்டம் லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்திய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரியின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார், மேலாண்மை இயக்குனர் வயிரவன் முன்னிலை வகித்தார், விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி கார்த்திக் வரவேற்று மாணவர்களாகிய நீங்கள் எதுவாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்றும் வாழ்த்தினார்.
கல்லூரியின் முதல்வர் கணேஷ் பாபு மாணவர்களுக்கு கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றியும், கல்வி என்பது தொடர் பயிற்சி என்றும் எடுத்துரைத்தார், ஸ்ரீபாரதி மகளிர் கலைக் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் எம். பாலசுப்பிரமணியன் பேசுகையில் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமானால் கஷ்டப்பட வேண்டுமென்றும் எதையும் இஷ்டப்பட்டு படித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் என்றும் வாழ்த்தினார், சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே. மணிவண்னன் தனது உரையில் புதுக்கோட்டை மாணவர்களின் தரத்தினை முதலிடமாக உயர்த்த வேண்டுமென்ற குறிக்கோளை தனது வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பதாகவும் அது மாணவர்களின் கையில் மட்டுமே உள்ளது என்றும் வெற்றியின் வழியில் உங்கள் பயணம் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைவர் எம்.எஸ். சாலை செந்தில் தனது உரையில் எவன் ஒருவன் சிறந்த பண்போடு இருக்கின்றானோ அவனே வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியுமென்றும் கூறினார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சுரேஷ் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இக்கருத்தரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் 3500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இக்கருத்தரங்கில் மாணவர்கள் வருகின்ற பன்னிரென்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, அதிக மதிப்பெண் பெறுவது என ஒவ்வொரு பாடத் துறையைச் சார்ந்த வல்லுநர் குழுவினர் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்.
கல்லூரியின் துணைத் தலைவர் சோம. நடராஜன், தாளாளர் இராமையா, செயலாளர் தியாகராஜன், செயல் இயக்குநர் எம். பாண்டிகிருஷ்ணன், இயக்குநர்-இயக்குதல் டி. கணேசன், மனிதவள இயக்குநர் மீனா வயிரவன், இணைச் செயலாளர் அம்பிகாபதி, திட்ட இயக்குநர் சோம. யோகநாதன், அறக்கட்டளை இயக்குநர் செந்தில், ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்தரங்கின் நிறைவில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.சூரியமூர்த்தி நன்றி கூறினார்.