ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா நிறைவேற்றம்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாரதிதாசன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது, பிரிக்கப்பட்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

 இதற்காக அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் மேற்கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை நீக்கம் செய்வதற்கான சட்ட முன்வடிவை  சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கம் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். சில மணி நேரங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதிமுக எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.