
ஜெயங்கொண்டம் ஆவேரி ஏரியை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அரியலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கூறினார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், கலெக்டர் ரமண சரஸ்வதி பேசும்போது கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின்கீழ், அரியலூர் மாவட்டத்தில் 7,954 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 5,810 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தம் 1,296 நபர்களுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சிறப்பான நடவடிக்கை எடுத்து தீர்வு மேற்கொண்டதற்க்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் உள்ளிட்டவை வழங்கி உள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உருவாக்கிய மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்த நாள், ஆடி திருவாதிரை திருவிழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், மருத்துவ வல்லுநர்களால் கொரோனா 3ம் அலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் இப்பாதிப்பு ஏற்படாத வகையில், தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள, ஆவேரி ஏரியை தூர்வார, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஏரியை ஆழப்படுத்தி, சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் செய்தியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.