
ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக டெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பொருளாதாரத்தில் முன்னணியில் திகழும் உலகின் 20 நாடுகளைக் கொண்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் தலைவர் என்ற வகையில், மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாநாட்டில், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிக்ழ்வு நடந்தது. ஜி20 மாநாட்டுக்கு வருகைதந்த ஆப்பிரிக்க யூனியனின் பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி வரவேற்றார். ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ளன. ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததன் மூலம், ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி20 கூட்டமைப்பு மிகப் பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.

மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்’ என்ற மாநாட்டின் கருப்பொருள் குறித்து விளக்கம் அளித்தார். வசுதைவ குடும்பகம் எனும் உலகம் அனைத்தும் ஒரு குடும்பமே எனும் இந்திய பாரம்பரியத்தின் பரந்து விரிந்த பார்வையை ஜி20 மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர் விளக்கினார். மனிதர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்களுக்கான தேவை குறித்தும், இதை இந்திய கலாச்சாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள LiFE இயக்கம் குறித்து விளக்கிய பிரதமர் மோடி, சர்வதேச சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். சர்வதேச அளவில் பசுமை எரிசக்திக்கான ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின்உற்பத்தித் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது, இயற்கை விவசாயம், தேசிய இயற்கை ஹைட்ரஜன் இயக்கம் ஆகிய இந்தியாவின் முன்னெடுப்புகளை பிரதமர் மோடி உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கினார்.
இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, புதுடெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேசையை ஹம்மர் கருவியைக் கொண்டு தட்டி அவர் இதை அறிவித்தார். அப்போது, அருகில் இருந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட அரங்கில் உள்ள தலைவர்கள் கைகளைத் தட்டி வரவேற்றனர். இந்தப் பிரகடனத்தில் உலகின் தெற்கின் வளர்ச்சிக்கான இந்தியாவின் முன்னுரிமைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு மற்ற நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேற்கு உலகம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட தெற்கு உலகின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.