ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரருக்கு கார் பரிசு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டும் வகையில் தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்து மக்களாலும் வரவேற்கப்படும் சிறந்த விளையாட்டாகும். அதில் முக்கியமாக உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகைக்கு 2 நாள் கழித்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை (15-ந்தேதி) தினத்தில் அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக இன்னும் சில நாட்களில் ஆன்லைன் மூலம் இதற்கான பதிவுகள் தொடங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி, தடுப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் கலெக்டர்கள் சரவணன், திவ்யான்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:- உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17-ந்தேதி அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து, அதன்படி உரியவர்களுக்கு எவ்வித பாகுபாடின்றி டோக்கன்கள் வழங்கப்படும். போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் கார் பரிசளிக்கப்படுகிறது. இது தவிர காளைகளை அடக்குபவர்களுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சிறந்த காளைகளுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் கொடுக்கப்படும்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். சிறந்த வீரர் மற்றும் காளைகளுக்கு அவர் பரிசு வழங்குகிறார். அலங்காநல்லூரை போல பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கிராம கமிட்டிகளுடன் இணைந்து அரசு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 92