சோழவந்தான் அருகே சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டி கொலை

கொலை வழக்கில் மதுரை சிறையிலிருந்த பிரபல ரடிவு ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் பழிக்குப்பழியாக கொலை செய்த கும்பலால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் (எ) சக்திவேல் (35). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் 2021 நவம்பர் மாதம் கைதாகி மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3.30 மணிக்கு ஜாமீனில் வெளியே வந்த சக்திவேல், தனது இரு சக்கர வாகனத்தில் சோழவந்தான் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மாலை 5.30 மணிக்கு சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடுபட்டி போலீசார், கொலை செய்யப்பட்ட சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சக்திவேல் மூன்றுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இவரால் கொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு கும்பல் பழிக்கு பழியாக பழிவாங்க தற்போது இவரை கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் உத்தரவின் பேரில், 2 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 + = 35