சொகுசு கார் விவகாரம் : நடிகர் தனுஷுக்கு சென்னை ஐகோர்ட் 48 மணிநேரம் கெடு

சொகுசு கார் விவகாரத்தில் நடிகர் தனுஷுக்கு சென்னை ஐகோர்ட் 48 மணிநேரம் கெடு வழங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் 2015ம் ஆண்டு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்குக் கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தார். நுழைவு வரியை வசூலிக்க அரசுக்கு அதிகாரமில்லை என்று அப்போதைய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தன்னை வரி செலுத்தக்கோரிய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார் நடிகர் தனுஷ். அதில், இடைக்கால உத்தரவுப்படி, பாதித்தொகையை செலுத்திவிட்டு வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், வழக்கு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ரூ.60.66 லட்சம் நுழைவு வரியில் ரூ.30.33 லட்சம் தனுஷ் தரப்பில் செலுத்தப்பட்டு வாகனத்தை பதிவுசெய்து பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்ததுடன், அந்த வழக்கையும் நிராகரித்ததை அடுத்து, தனுஷ் தொடர்ந்த வழக்கும் நேற்று காலை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்காமல் வாய்மொழிக் கருத்தாக பல கண்டனங்களை பதிவு செய்ததோடு, வரிகுறித்த பல கேள்விகளையும் முன்வைத்தார்.

மேலும், நடிகர் தனுஷ் செலுத்தவேண்டிய வரிபாக்கியை வணிக வரித்துறை இன்று மதியத்துக்குள் தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று மதியம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனுஷ் மீதம் செலுத்த வேண்டிய ரூ.30.33 லட்சம் வரிபாக்கி 48 மணிநேரத்துக்குள் செலுத்த கூறி சென்னை ஐகோர்ட் கெடு கொடுத்து உத்தரவிட்டுள்ளது.