சேலம் வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று புதுக்கோட்டையில் அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவர் போலி லட்டரி விற்பனை மற்றும் போதைபொருள் விற்பனையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலி லாட்டரி விற்பனைக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களுடன் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளர்.

இத்தாக்குதலைக் கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகரச் செயலாளர் கு.ஜெகன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், துணைச் செயலாளர் அ.சரவணன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.