
செய்யாறு வழியாக தென் மாவட்டப்பகுதிகளுக்கு தொலைத்தூர பஸ்கள் வசதி செய்துத் தரக் கோரி செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் அ.பரணிராஜன், மூத்த நிர்வாகிகள் பி.நடராஜன், தே.சாலமன் ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்து இருப்பாதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செய்யாறு, மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கோட்டமாகும். செய்யாறில் 62 வருடங்களாக செயல்பட்டு வரும் சார் ஆட்சியர் அலுவலகம் நூற்றாண்டு, பொன்விழா என பல விழாக்களைக் கண்ட பள்ளிகள், அரசு கல்லூரி, அரசு அலுவலகங்கள் என 60 க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட அந்தஸ்தில் தரவரிசையில் முன்னிலையில் முதலாவது இடத்தில் இருந்து வருகிறது .
செய்யாறு தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய இரு வட்டங்கள் அமைந்துள்ளன. இத்தொகுதியில் சுமார் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள செய்யாறு சிப்காட் பகுதியில் 40 ஆயிரம் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவ்வாறு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களில் 25 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் தென்மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதேப் போல் செய்யாறு நகரம் மற்றும் அனைத்துக் கிராமங்களிலும், தென்மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான் வியாபாரிகளாக உள்ளனர்.
செய்யாறு தொகுதி வழியாக ஏற்கெனவே புதுச்சேரி – திருப்பதி, திருத்தணி – நாகர்கோவில், சேலம் – சென்னை, காஞ்சிபுரம் – திருச்சி ஆகிய தொலைத்தூர பஸ்கள் சென்றுக் கொண்டு இருந்தன. மேற்படி பஸ்கள் அனைத்தும் சில வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன. தற்போது செய்யாறு வழியாக ஒரு தொலைத்தூர பஸ்கள் ஒன்றுக்கூட செல்லவில்லை.
செய்யாறில் இருந்து தமிழகத்தின் தென்மாவட்டப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், வந்தவாசி அல்லது திண்டிவனம் சென்றோ அங்கிருந்து தொலைத்தூர பஸ்ஸை பிடித்து செல்லவேண்டியுள்ளனர். இவ்வாறு 2, 3 பஸ்களை பிடித்து செல்ல குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்களும், மூட்டை முடிச்சிகளுடன் வயதானவர்களுடன் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளனர்.
எனவே, செய்யாறு தொகுதி மக்கள் பயன் பெறும் வகையில் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாகச் செல்லும் அனைத்து தொலைத்தூர பஸ்களை காஞ்சிபுரம் – செய்யாறு – வந்தவாசி வழியாக மாற்றி இயக்கி உதவிட வேண்டும்.
மேலும், அனைத்து இன ஆன்மீக பக்தர்களுக்கு உதவிடும் வகையிலும், வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி செய்யாறு வழியாக புதிய வழித்தடங்களாக
திருத்தணி, காஞ்சிபுரம் – கோயம்புத்தூர், ஊட்டி (வழி:செய்யாறு, ஆரணி, தி.மலை, சேலம்), வேளாங்கண்ணி – திருப்பதி (வழி: நாகூர், சிதம்பரம், சீர்காழி, புதுச்சேரி, திண்டிவனம், செய்யாறு, ஆற்காடு, சித்தூர்), வேளாங்கண்ணி – பெங்களூரு (வழி: நாகூர், சிதம்பரம், சீர்காழி, புதுச்சேரி, திண்டிவனம், செய்யாறு, ஆற்காடு, சித்தூர்)
புதுச்சேரி – மைசூர் (வழி: திண்டிவனம், செய்யாறு, ஆற்காடு, சித்தூர், பெங்களூரு) போன்ற பல வழித்தடங்களில் புதியதாக தொலைத்தூர பஸ்களை இயக்கி உதவிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.