
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 17 ம் தேதி பதவியேற்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித், கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக புதிய கவர்னராக நாகலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பு வகிக்க பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8.50 மணிக்கு இண்டிகோ விமானத்தில் சண்டிகருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் பன்வாரிலால் புரோகித்திற்கு வழியனுப்பு விழா இன்று காலை நடந்தது. பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அத்துடன் தமிழகத்தை விட்டு விடை பெற்று செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது. முன்னதாக நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்களுடன் சென்று கவர்னரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுவரை தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி வரும் 17ம் தேதி பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.இதற்காக வருகிற 16ம் தேதி இரவு 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் புதிய கவர்னர்ஆர்.என்.ரவி சென்னை வருகிறார்.