சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரம் இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

சென்னையில் நாளை 37-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,சென்னை மாநகராட்சியில் நாளை 37-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் (அ) 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசியும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இதுவரை 42,35,939 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 6,04,042 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை விலையில்லாமல் செலுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + = 15