எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவையும் ஆற்றலையும் சிந்தனையும் செயல்பாட்டையும் போற்றும் அரசாக திமுக அரசு எப்போதும் இருந்துள்ளது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ”காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்தல்” குறித்த பன்னாட்டு மாநாட்டை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் கூறியதாவது:- எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவையும் ஆற்றலையும் சிந்தனையும் செயல்பாட்டையும் போற்றும் அரசாக திமுக அரசு எப்போதும் இருந்துள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் விஞ்ஞானி ஆக மட்டுமல்ல, தமிழ் வேளாண் விஞ்ஞானி என்பதற்கும் எடுத்துக்காட்டாக இந்த நிறுவனத்தையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அமைத்ததாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், வருகிற 13ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறோம். இந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை வருகிற 14ம் தேதி தாக்கல் செய்யப் போகிறோம். வேளாண்மைதான் உயிராக உடலாக நம் நாட்டுக்கு இருக்கிறது. அந்த வேளாண்மைக்கு சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அதன்படி, விவசாயத்திற்கான தனியான நிதிநிலை அறிக்கை, இயற்கை வேளாண்மைக்கு தனிக்கவனம், உழவர் சந்தைக்கு புத்துயிர் அளித்தல், கிராமச் சந்தைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள், நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம், சென்னை பெருநகரத்தை ”வெள்ளநீர்” சூழாமல் தவிர்க்க ”பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு” அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.