சென்னை கிழக்கு, புளியந்தோப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை (கிழக்கு), புளியந்தோப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுநர் (பழகுனர்) உரிமம் பெற விண்ணப்பித்திருந்த 50க்கும் அதிகமானோரைச் சந்தித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.ஸ்ரீதர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவருடன் மோட்டார் வாகன ஆய்வாளர் சோ.அ.ஞானவேல் உடனிருந்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சாலை பாதுகாப்பு குறித்து பேசுகையில்: “இந்தியாவில், சாலை விபத்தினால் மட்டும் சிறுவர் – பெரியவர் என்ற வயது வித்தியாசம் இன்றி ஆண்டிற்கு ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் இறப்பவர்களில் பெரும்பாலானோர் தலையில் அடிபட்டு அகால மரணமடைகின்றனர். இதுபோன்ற சாலை விபத்துகள் 4 வகையான காரணங்களால் அதிக அளவில் நடக்கிறது.

முதலாவதாக, ஹெல்மெட். அதிகப்படியான விபத்துக்கள் இருசக்கர வாகனங்களாலேயே ஏற்படுகிறது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்பு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது. இருப்பினும், இன்றளவும் 80 விழுக்காடு இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டுமே ஹெல்மெட் அணிகின்றனர். மீதமுள்ள 20 விழுக்காடு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. அதிலும் குறிப்பாக, ஓட்டுநருடன் பயணிப்பவர் ஹெல்மெட் அணிவதே இல்லை. ஆயிரத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில்தான் இருவரும் ஹெல்மெட் அணிவதை பார்க்க முடிகிறது.

அடுத்ததாக, அதிக பாரம். படித்தவர் பாமரர் என பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருமே, ஒரு சக்கர வாகனத்தில் 3 பேர், நான்கு பேர் பயணிக்கின்றனர். ஒரு சில நேரங்களில் ஒரு இருசக்கர வாகனத்தில் 5 முதல் 6பேர வரை பயணிக்கின்றனர். இதுவும் விபத்துக்கு முக்கிய காரணமாகிறது. அடுத்து, செல்போன். செல்போனில் பேசிக்கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்குவதால் ஓட்டுநரின் கவனம் சிதறுகிறது. ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு, இன்னோரு கையால் வண்டியை ஓட்டுவதால், திடீரென பிரேக் பிடிக்கும் சூழல் வரும்போது வாகன ஓட்டி நிலைகுலைந்து விபத்து ஏற்படுகிறது.அடுத்ததாக, மது அருந்துதல். மது அருந்திவிட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதால், ஓட்டுநர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஓட்டுநர்களைவிட, சாலையில் பயணிப்பவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள், மேற்கூறிய நெறிமுறைகளை கடைப்பிடித்து, சாலை விபத்துகளை தடுத்து, தங்களது இன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 8