
சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மற்றும் சட்டமுன்வடிவு ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளை இணைப்பதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை ஒருங்கிணைந்த வகையில் இருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றுவதற்கும் மற்றும் 2013ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைச்சட்டம், 1981ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைச் சட்டத்தினை திருத்தம் செய்யவும், 2021ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஆரம்ப நிலையிலேயே அதிமுகவை சேர்ந்த கே.பி.அன்பழகன் கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘உங்கள் கருத்துக்களை, சட்டமுன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது பேசுங்கள், இப்போது உட்காருங்கள்’ என்றார்.
பின்னர் சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை ஆரம்ப நிலையிலே நாங்கள் எதிர்க்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்விக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி, அவரது பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியிருக்கிறோம் எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.
இதனைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் இருந்து ஓபிஎஸ் தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் வாலாஜா சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கக்கூடாது என்று கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. காவல்துறை இணை ஆணையர் தலைமையிலான போலீசார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், வேன்களில் ஏற்றிக்கொண்டு வந்து, திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்து, சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதா தமிழக சட்டபேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும் கலைவாணர் அரங்கம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 63 பேர் மீது ஒன்றாக கூடுதல், அரசாங்க உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.