சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

சென்னை, கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதையடுத்து பிப்ரவரி 7-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணனை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 − 33 =