சென்னையில் 3 பேரிடம் மத்திய உளவுத் துறை விசாரணை: தீவிரவாதிகளுடன் தொடர்பா?

சென்னையில் 3 பேரிடம் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், உயிரிழந்த இளைஞர் தற்கொலை படைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், அண்மையில் கர்நாடகாவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. அதிலும் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், நவீன கருவிமூலம் (சிம்பாக்ஸ்) வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி சிலர் சென்னையில் ஃபோன் பேசி வருவதாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர் விசாரணையில் சென்னை அண்ணாநகர் மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த 3 பேர் இதேபோல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றிரவு அண்ணாநகரில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து மத்தியஉளவுத் துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், அவர்கள் வெளிநாடுகளுக்கு அதிக நேரம் ஃபோனில் பேசியது தெரியவந்தது. அவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா? அல்லது வேறு காரணங்களுக்காக யாருடனாவது தொடர்பில் இருந்து வந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், ஏராளமான சிம்பாக்ஸ் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அவர்களிடம் தொடர்ந்து மத்திய உளவுத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − 47 =