நண்பரை பார்க்க சென்னை வந்த தென்காசியை சேர்ந்த கல்லூரி மாணவர், நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியானார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் இப்ராகிம் நவ்வுபல்(21). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சென்னை வடபழனியில் வசித்து வரும் தன்னுடைய சிறுவயது நண்பரான சிவபாரதியை பார்ப்பதற்காக கடந்த 12-ந் தேதி இப்ராகிம் நவ்வுபல் சென்னை சென்றுள்ளார். பின்னர் நண்பரின் அறையில் தங்கியிருந்துள்ளார். இதையடுத்து நண்பர்கள் இருவரும் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அமைந்தகரைக்கு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை இப்ராகிம் நவ்வுபல் ஓட்டியுளார். அவருக்கு பின்னால் சிவபாரதி அமர்ந்து இருந்தார்.
அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரம் இருந்த நடைபாதை மீது மோதியுள்ளது. இதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இப்ராகிம் நவ்வுபல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், படுகாயம் அடைந்த இப்ராகிம் நவ்வுபலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இப்ராகிம் நவ்வுபல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னால் அமர்ந்து வந்த சிவபாரதி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.