சென்னையில் கூலிப்படை தலைவனை நீதிமன்ற வளாகத்தில் கொல்ல முயற்சி

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாலா. இவர் மீது தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளனகுறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி சென்னை அசோக் நகரில் சென்னையின் பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமாரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமாரை வெட்டிக் கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியாக மதுரை பாலா கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி அமைந்தகரை செனாய் நகர் பூங்கா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்திலும் மதுரை பாலாவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். கூலிப்படை தலைவனான மதுரை பாலா சென்னையில் பல பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களின் தனது கூலிப்படைகளை ஏவி குற்ற சம்பவங்களை நிகழ்த்தி வந்துள்ளான். இந்த நிலையில் ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கூலிப்படை தலைவனான மதுரை பாலாவை நேற்று மதியம் சரியாக 2:30 மணியளவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அசோக் நகர் போலீசார் அழைத்து வந்திருந்தனர்.

மதுரை பாலா மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் தகவல் அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இரண்டு மணி அளவில் கத்தியுடன் நீதிமன்றத்திற்கு வெளியில் பொதுமக்களுடன் கலந்து நின்றுள்ளனர். சரியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது மறைந்திருந்த மர்ம கும்பல் கத்தியுடன் வந்து மதுரை பாலாவை கத்தியால் தாக்கி உள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொலை முயற்சி தாக்குதலால் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த நபர்கள், வழக்கறிஞர்கள் பதறி ஓடியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களான ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, சசிகலா ஆகியோர் கத்தியுடன் ஓடிய மர்ம கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலருக்கு மர்ம நபர்கள் வைத்திருந்த கத்தி கிழித்து கையில் காயம் ஏற்பட்டது. மூன்று நபர்கள் பிடிபட மற்ற இருவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் ஷெனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல், அருண், குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்பது தெரிய வந்தது. மதுரை பாலாவை நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே கொலை செய்ய முற்பட்ட நபர்கள் யார்? இதற்குப் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் தப்பி ஓடிய மற்ற இரண்டு நபர்களையும் கோட்டூர்புரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த கொலை வழக்கு குற்றவாளியை மர்ம கும்பல் ஒன்று நீதிமன்றத்திற்கு உள்ளேயே கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − 87 =