குடும்பத் தகராறில் ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததை அறிந்த மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த புழல் அண்ணா நினைவு நகரை சேர்ந்தவர் பழனி(47). இவர், சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சங்கீதா(35). கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என எழுதி கொடுத்துவிட்டு வந்தனர். அதன்பிறகு சங்கீதா, செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள தாய் வீட்டிலும், பழனி புழலில் உள்ள வீட்டிலும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை புழல் அம்பத்தூர் சாலையில் மழைநீர் கால்வாய் அருகே பழனி விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் கணவர் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சங்கீதா, நேற்று மாலை தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது