சென்னையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி பிரம்மாண்ட கலை விழா: சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னையில் பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் பிரம்மாண்ட கலை விழா நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சட்டப்பேரவையில் இன்றைய தினம் சுற்றுலா துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை மீதான விவாதங்கள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது விவாதங்கள் நிறைவுற்று இதற்கான புதிய அறிவிப்புகளை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் வெளியிடுகிறார்கள்.

குறிப்பாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் அதனுடைய அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக பாரம்பரிய கலைகள் இடம்பெறும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் பிரம்மாண்ட கலைவிழா நடத்தப்படும் என்றும் இதற்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் கலை திறனை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மற்றும் மாநில வாரியாக கலை போட்டிகள் நடத்துவதற்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். கலைமாமணி விருதுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் தொகையானது 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொல்பொருள் தொகுப்பு காட்சிகளை விரிவுபடுத்தும் விதமாக ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் 22.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இயல், இசை, நாடக மன்றத்தில் வழங்கப்படும் தொகை ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும். தொல்லியல் நிறுவனம், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்படும். தமிழ்நாட்டில் புதிதாக விருதுநகர், திருநெல்வேலி, தருமபுரி உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு மற்றும் 2 இடங்களில் கள ஆய்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.