செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மருத்துவமனையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற எஸ்.அல்லி, அவரை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிந்து கடந்த ஜூன் 28-ம் காணொலி வழியாக ஆஜரானார். இதைத்தொடர்ந்து, அவருடைய நீதிமன்ற காவலை, ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற நீதீபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி வழியாக ஆஜரானார். இதனைப் பதிவு செய்து கொண்ட, சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற நீதீபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 26-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.