செங்கமலபட்டி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக இருவர் கைது உரிமையாளருக்கு வலை வீச்சு

செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். வட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதை முன்னிட்டு தற்போது இங்கு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தங்கல் மேல மாட வீதியைச் சேர்ந்த ரவி, சாமுவேல் ஜெயராஜ் ஆகிய 2 பேர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசு ஆலைக்கு இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர்கள் ஆலையில் உள்ள தனியறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அவை வெடிக்க தொடங்கியது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, பச்சைமலை கோட்டை, கிராமம் பாலாஜி நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஜெயராமன் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கும் தல 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் காளியப்பன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பட்டாசு தொழிற்சாலை மேலாளர் கோபால்சாமி மற்றும் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 1 = 5