சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.
அதில், கடந்த மார்ச் 2000ம் ஆண்டு தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டதாகவும், இதற்கிடையே மீன்பிடி தடை காலத்தை மறுஆய்வு செய்யவும், மீன்வளத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு தொழில்நுட்ப கொள்கையை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2014ம் ஆண்டு இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ஒன்றிய அரசு உத்தரவிட்டதாகவும், ஆனால் தமிழகத்தில் இந்த உத்தரவு பின்பற்றப்படாததால் தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி தமிழக அரசுக்கு மனு அளித்ததாகவும் இது தொடர்பாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அனுப்பிய பதில் கடிதத்தில் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை 4 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.