சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் – பிரதமர் மோடி புகழாரம்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மக்களிடம் பேசுவது வழக்கம்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- நம்முடைய கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றறின் விளையாட்டு மைதானங்கள் நிரம்ப வேண்டும். அனைவரும் பங்கேற்பதன் மூலம் மட்டுமே, விளையாட்டில் அடைய வேண்டிய தகுதியான உயரத்தினை இந்தியா அடையும். விளையாட்டின் மீதுள்ள இந்த உத்வேகம் நின்று விட நாம் விட்டு விட கூடாது.

இந்த ஆண்டில், 40 ஆண்டுகளுக்கு பின்பு ஹாக்கி போட்டியில் நாம் ஒலிம்பிக் பதக்கம் வென்று உள்ளோம். மேஜர் தியான் சந்த் இன்று உயிருடன் இருப்பார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டின் மீது உள்ள ஈர்ப்பு பற்றி நாம் காண முடிகிறது. விளையாட்டின் மீதுள்ள இந்த ஆர்வமே மேஜர் தியான் சந்துக்கு செலுத்தும் மிக சிறந்த அஞ்சலி.

நமது பாரம்பரியத்தை போற்றி பாதுகாப்பதும், அதனை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையாகும். நமது வருங்கால தலைமுறையினருக்கும் நம்முடைய மொழியில் உரிமை உள்ளது. சமஸ்கிருத இலக்கியம் மனிதநேயம் மற்றும் அறிவின் தெய்வீக தத்துவத்தை உள்ளடக்கியது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. குப்பையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் கிராமத்தின் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தபடுகிறது. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை புரிந்துகொள்வதற்கான பேராவல் நமக்கு அதிகரிக்க வேண்டும் என்று பேசினார்.