சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜுனன் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த 3-3-2023 அன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜுனன்(46) என்பவர் தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் நடைபெற்றவுடன் டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக மூன்று இலட்சம் ரூபாயினை நிதியுதவியாக அர்ஜுனன் குடும்பத்தினருக்கு வழங்கி, அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்று அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.
அர்ஜுனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவரை காவல் துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து உரிய மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.