சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் : 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்- ஊழல் தடுப்பு போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் வருகிற 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் வருகிற 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த போது, அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறி இருப்பதாகவும், சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அந்த குழு சிறையில் நேரில் ஆய்வு செய்ததுடன், தீவிர விசாரணை நடத்தியது. பின்னர் அந்த குழு, சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியதாகவும் கூறி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. இதையடுத்து இதுதொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் ஆகியும், ஊழல் தடுப்பு படை போலீசார் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர். இதையடுத்து, சென்னையை சேர்ந்த கீதா என்பவர், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். அதில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கு விசாரணையை ஊழல் தடுப்பு படை போலீசார் தாமதமாக விசாரித்து வருவதாகவும், இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியதுடன், பரப்பனஅக்ரஹாரா சிறையில், இதற்கு முன்பு சூப்பிரண்டாக பணியாற்றிவிட்டு, தற்போது பெலகாவி ஹிண்டல்கா சிறை சூப்பிரண்டாக பணியாற்றும் கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தி இருந்தனர்.

இதற்கிடையில், கீதா தொடர்ந்திருந்த மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் சில மாதங்கள் காலஅவகாசம் வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாவதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் காலஅவகாசம் வழங்க முடியாது. அதனால் வருகிற 25-ந் தேதிக்குள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 7 = 15

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: