சிதம்பரம் முத்து மாணிக்க தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்ராவ் (வயது 40). பெயிண்டர் வேலை செய்யும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கைக்கு திருமணமாகி 5 வயது பெண் குழந்தை உள்ளது. இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சிதம்பரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு மகேஷ்ராவ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தங்கை, மகேஷ்ராவை கண்டித்துள்ளார்.
இதனை பொருட்படுத்தாத மகேஷ்ராவ், தொடர்ந்து 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்ராவின் தங்கை சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வனஜா, மகேஷ்ராவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார். தங்கையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.