சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மேல்நிலைப்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்து, சிறப்பாக கால்நடைகள் வளர்ப்போர்களுக்கு ஊக்கப் பரிசுகள் மற்றும் தாது உப்பு கலவைகளை வழங்கி, கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: கால்நடைகளின் நலன்காக்க 2022-23ம் ஆண்டு கால்நடைகள் சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 260 முகாம்கள் மார்ச் 2023ம் மாதத்திற்குள் நடத்தப்படவுள்ளது.

முகாமில் கால்நடைகளுக்கு கூடுதல் மருத்துவ வசதிகள், மேம்படுத்தப்பட்ட கூடுதல் கால்நடை இனப்பெருக்க முறைகள், கால்நடைகள் வளர்ப்போருக்கு சிறந்த கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முறைகள், செறிவூட்டப்பட்ட தீவன முறைகள் மற்றும் கால்நடைகளின் நலம் குறித்து கூடுதல் அறிவியல் தொழில்நுட்பங்களை செயல்படுத்தப்படுவதால் ஊரக ஏழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை சம்பந்தமான கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதால், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கு கால்நடை வல்லுநர்களிடம் அறிவுரைகள் பெற்று பயனடைலாம். சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருதும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, கால்நடைத்துறை உதவி இயக்குநர் ரவீந்திரன், வட்டாட்சியர் பிரவீணா மேரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 3 = 4