NIRF தரவரிசபை்பட்டியலில் புதுவை கல்வி நிலையங்கள் பின்தங்கியுள்ளன. மேலும் முதல் சிறந்த 100 கல்வி நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த 19 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று புதுச்சேரி. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என மொத்தம் நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது புதுச்சேரி. அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கி வரும் கல்விக் கூடங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், நிகழ் கலைக்கூடம், சட்டம், கலை மற்றும் அறிவியல் சார்ந்த சுமார் 85 உயர்க்கல்விக் கூடங்கள் புதுச்சேரியில் உள்ளன.அதில் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (ஜிப்மர்) அடங்கி உள்ளன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டிலும் புதுச்சேரி பிரதேசத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக உள்ள சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சார்பாக இடம் பெற்றுள்ள ஒரே ஒரு நிறுவனம் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் மட்டும்தான். 43.10 மதிப்பெண்களுடன் 87-வது இடத்தை புதுச்சேரி பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. அதேபோல தேசிய அளவில் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 58-வது இடத்தை பிடித்துள்ளது புதுச்சேரி பல்கலைக்கழகம்.
பொறியியல் கல்லூரியை பொறுத்தவரையில் தேசிய அளவில் 144-வது இடத்தை புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பிடித்துள்ளன. கலை மற்றும் அறிவியல் பிரிவில் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு நிறுவனம் தேசிய அளவில் 50-வது இடத்தை பிடித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரையில் ஜிப்மர், தேசிய அளவில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மகாத்மா காந்தி மருத்துவம் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த பிரிவில் 46-வது இடத்தை பிடித்துள்ளது. பல் மருத்துவம் மற்றும் ஆய்வு சார்ந்த தரவரிசையில் புதுச்சேரி கல்வி நிறுவனங்கள் இடம் பெறவில்லை. புதுச்சேரி சட்டக்கல்லூரி இதில் பங்கேற்கவில்லை. தேசிய அளவில் ஓட்டுமொத்தமாக முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழகத்தில் இயங்கிவந்த 19 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.