சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் முடிவை கண்டித்து அதிமுக வெளிநடப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை.,யுடன் இணைக்கும் விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பல்கலையோடு ஜெ., பல்கலைகழகம் இணைக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆக.,26) அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ‛விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது,’ எனக் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‛தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் இருந்திருக்காது,’ எனத் தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் விழுப்புரத்தில் ஜெ., பல்கலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டனர். ஜெயலலிதா பெயர் தாங்கி கொள்ள முடியாத காரணத்தினால், அண்ணாமலை பல்கலையோடு ஜெ., பல்கலைகழகம் இணைக்கப்படுகிறது.
இது நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே செய்துள்ளனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். ஏழை எளியோர்கள் குறைந்த கட்டணத்தில் உண்ண வேண்டும் என்பதற்காகவே அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதைக்கூட மூடுவேன் என சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாகதான் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 26 = 35