சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் உத்தரவு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்ததையடுத்து விபத்து நிகழ்ந்த இடத்தினை மாவட்ட ஆட்சியர்  செ.கார்மேகம், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ், இன்று  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 இந்த ஆய்விற்குப்பின்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, விலைமதிப்பில்லாத மனித உயிரின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக தனி கவனம் செலுத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் நெடுஞ்சாலைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்துகளின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் சாலை விபத்து இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆத்தூர் நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து ஆராயப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்கள் அனைத்தும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதாலும், ஓட்டுனரின் அலட்சியத்தாலுமே  நடைபெறுகிறது. வாகனங்களை சாலைகளில் எக்காரணத்தைக்கொண்டும் நிறுத்தி வைக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் தேவையான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளை அமைத்திடவும், தேவையான இடங்களில் வேகத்தடைகள், மின் விளக்குகள் மற்றும் பாலங்கள், வளைவுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகளின் முன்னே செல்லும் வாகனங்களை முந்திச் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்திடவும், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்துள்ளார்

இந்த ஆய்வின்போது ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சா.சரண்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1