
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படமாக ‘800’ உருவாகியுள்ளது.
மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, முத்தையா முரளிதரன் வேடத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மதுர் மிட்டல், அவரது மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மகிமா நம்பியார் நடித்துள்ளனர். ‘கனிமொழி’ படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணியில், 2022ல் புக்கர் பரிசு வென்ற ஷெஹான் கருணாதிலக்க இணைந்து பணியாற்றியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைக்கும் வரும் இப்படத்தில், முக்கிய வேடங்களில் நரேன், நாசர், வேல.ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோகித்தஸ்வா நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் கலந்துகொண்டார்.
மதுர் மிட்டல் பேசியபோது, ‘என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்’ என்றார். எம்.எஸ்.ஸ்ரீபதி கூறுகையில், ‘முரளிதரனின் பூர்வீகம், குழந்தைப் பருவம், குடும்பம் உள்பட முழுவதையும் தெரிந்து கொண்டேன். நிறைய சவால்களை தாண்டி படத்தை உருவாக்கியுள்ளோம்’ என்றார். மகிமா நம்பியார் கூறும்போது, ‘ஹீரோவின் பயோபிக் என்பதால், எனக்கு அதிகமான காட்சிகள் இருக்காது என்று தெரிந்தும் நடித்துள்ளேன். ஒரு கிரிக்கெட்டராக முத்தையா முரளிதரனைப் பற்றி தெரிந்தவர்கள், அதையும் தாண்டி அவரைப் பற்றி தெரிந்துகொள்ள இப்படம் நிச்சயம் உதவும்’ என்றார்.