சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு விருது திருவள்ளூர் கலெக்டர் தகவல்

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர்விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி சமூக பொறுப்புணர்வுடன், செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. தனியார், பொதுத்துறை, கூட்டுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழில், சேவை, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பில் ஒரு பகுதியாக பொருளாதார மேம்பாட்டு பணியில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாக செயலாற்றலாம். தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள், சங்கங்கள் இந்த விருது பெற தகுதியற்றவை ஆகும். விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீர் மழை நீர் சேகரிப்பு, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள் இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

விருதுக்கான விண்ணப்பம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய விண்ணப்பம் 03-01-2023 செவ்வாய்கிழமை முதல் இணையதளத்தில் செயல்பாட்டு நிலையில் இருக்கும். எனவே தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே தகுந்த ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விருதினை பெற தகுதியான தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 12 = 19