சபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கம்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதில், கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 60 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு நடத்தப்படும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டு நாளை மறுநாள் கார்த்திகை 1ம் தேதி பிறக்கிறது. அதுமுதல் மண்டல பூஜை தொடங்குகிறது.

இந்த பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர் தீபாராதனை நடத்தியதும், உப தேவதைகளின் கோவில்களில் விளக்கு ஏற்றப்படும்.

நாளை மறுநாள் காலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து விளக்கில் தீபம் ஏற்றியதும், மண்டல காலம் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர். சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டன.

உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல் உள்பட 13 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது தான் மண்டல, மகர பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளது. எனவே, சபரிமலைக்கு இந்தாண்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கேரளாவின் அனைத்து பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்துக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிஜுபிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம் என பல பகுதிகளில் இருந்தும் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் 18 ஜோடி வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் எண். 07119 நரசாபூர்-கோட்டயம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் நரசாபூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் 18 மற்றும் 25ம் தேதிகளில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (2 சேவைகள்) 5.30 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

ரெயில் எண். 07120 கோட்டயம் – நரசாபூர் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் வருகிற 19 மற்றும் 26ம் தேதிகளில் (சனிக்கிழமைகள்) காலை 9.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும் (2 சேவைகள்). ரெயில் எண். 07117 செகந்திராபாத் – கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 20ம் தேதி மற்றும் டிசம்பர் 04, 18, ஜனவரி 08 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 11 மணிக்கு கொல்லம் சந்திப்பை சென்றடையும். இவ்வாறு தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 − = 54