சபரிமலையில் ஒரு வாரத்தில் 3 லட்சம் பேர் தரிசனம்: 18ம் படி ஏற பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் 18ம் படி ஏற பல மணிநேரம் காத்திருக்கிறார்கள்.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 16ம்தேதி திறக்கப்பட்டது. 17ம்தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் உடனுக்குடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்து ஒரு வாரமான நிலையில் இதுவரை சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சனி, ஞாயிறு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி தேவஸ்தான அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வரும் பக்தர்கள் நிலக்கல் பகுதியில் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் ஓய்வெடுத்து மலை ஏறுவது நல்லது. அதை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 45 = 50