சபரிமலையில் அப்பம், அரவணை வினியோகம்; அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், கேரள ஐகோர்ட் நேரடி கண்காணிப்பில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன.

தற்போது சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கும் நாள்தோறும் 2 லட்சம் டின் அரவணை, 1.50 லட்சம் பாக்கெட் அப்பம் ஆகியவை தங்கு தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க தற்போதைய நிலையில் 15 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது.

இந்நிலையில் அரவணை அடைக்கப்படும் காலி டின்களை சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனம், காலி டின்களை சப்ளை செய்வதில் காலம் தாழ்த்தி வருவதாக ஐகோர்ட்டில் சபரிமலை சிறப்பு கமிஷனர் அறிக்கை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து கமிஷனரின் அறிக்கை தொடர்பான விசாரணை கேரள ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில், நரேந்திரன், அஜித்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படும் அரவணை, அப்பம் ஆகியவற்றின் வினியோக வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், காலதாமதம் செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை இன்று 24ம் தேதி மீண்டம் விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 23 =