
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது. மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜயவாடாவில் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார் அங்கு தொண்டர்கள் பலர் குவிந்துள்ளனர்.