ஆலங்குடி அருகில் உள்ள எம்.ராசியமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் 39 ஆண்டு காலமாக சத்துணவு அமைப்பாளராக அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றதை பாராட்டி வழி அனுப்பு விழா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செபஸ்டியான் வரவேற்று விழாவினை ஒருங்கிணைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். விழாவினை தலைமையேற்று தனக்கு ஆரம்பக் கல்வியை சொல்லிக் கொடுத்து ஓய்வு பெற்றிருக்கிற ஆசிரியர் அந்தோணிசாமியை அழைத்து கௌரவப்படுத்திய சுப்பையா கூறுகையில்:-

கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடும் இந்த வேலையில் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் பணிபுரிந்து இதே நாளில் ஓய்வு பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவுப் பசிக்கு முன்பதாகவே அன்னப் பசியை நீக்கும் இந்தப் பணியில் 39 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். விழாவில் விஜயன், ஹோமியோபதி மருத்துவர் கண்ணதாசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்பையா, ஆசிரியர் ராணி, இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி கணேசன், அன்பு போன்றோர் வாழ்த்திப் பேசினார்கள். நினைவுப் பரிசு சத்துணவு அமைப்பாளருக்கு வழங்கப்பட்டது.