பிராமணர்களை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசிய வழக்கில் சத்தீஷ்கர் மாநில முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், இவரது தந்தை நந்தகுமார் பாகல்,86 , இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை புறக்கணிக்க வேண்டும். கிராமங்களில் அவர்களை அனுமதிக்காதீர்கள் என பேசினார்.சாதி மோதலை உருவாக்கும் விதமாக அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ராய்ப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையறித்த முதல்வர் பூபேஷ் பாகல், தனது தந்தை என்றாலும் அவர் மீது வழக்குப்பதிய போலீசாருக்கு உத்தரவிட்டார்.இது குறித்து முதல்வர் பூபேஷ் பாகல் கூறியது, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். சட்டத்திற்கு மேலானவர்கள் என யாருமே இல்லை. சத்தீஸ்கர் மாநில அரசு அனைத்து மதம், சமூகங்களையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது. என் தந்தையின் பேச்சு சமூக ஒற்றுமைக்கு எதிரானது. ஒரு மகனாக என் தந்தை மீது மதிப்பும்,மரியாதையும் உண்டு. ஆனால் மாநில முதல்வராக அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.இதையடுத்து போலீசார் நந்தகுமார் பாகல் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, ராய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.அவரை செப்.21ம் தேதி வரை (15 நாள்) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.